பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் மையத்தை கலெக்டர் ஆய்வு
பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வாலாஜாவை அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை எந்திரம் மூலம் அரைத்து சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் மையத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டிய நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில் வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட 36 ஊராட்சிகளில் இருந்து ஒரு கிலோவிற்கு ரூ.8 வீதம் பெற்று அதனை தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் உள்ள பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மையத்திற்கு அனுப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்து அரவை செய்த பின் சாலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்ததாரருக்கு ஒரு கிலோ ரூ.30 வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது வரை சாலை அமைக்கும் பணிக்காக சுமார் 440 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அரவை செய்து, அதில் 240 கிலோ ரூ.7,200க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டர் 3.75 மீட்டர் அகலம் கொண்ட தார் சாலைக்கு 438 கிலோ பிளாஸ்டிக் பயன்படுத்துவதால், தார் அளவு 6 சதவீதம் குறையும் என்றார்.
இதனைத் தொடர்ந்து தென்கடப்பந்தாங்கல் முசிறி சாலையில் நீர் மேலாண்மை மேம்பாட்டு குளம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், செயற் பொறியாளர் ஸ்ரீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், ஊராட்சிமன்ற தலைவர் பிச்சமணி, துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.