காணை ஒன்றியத்தில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

காணை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.

Update: 2023-08-29 18:45 GMT

காணை, 

கலெக்டர் ஆய்வு

காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காணை ஊராட்சியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் உணவு தயாரிப்பதற்கான சமையல்கூடம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளுக்கு நாள்தோறும் சுகாதாரமான முறையில் காலை உணவை சமைத்து வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட அவர், அங்கு சிகிச்சை பெற வந்தவர்களிடம் இங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்ததுடன் சிகிச்சை வழங்கும் பிரிவு, மருந்து வைப்பறை, ஆய்வகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் வருகைப்பதிவேடு மற்றும் சிகிச்சைப்பெறுபவர்களின் பதிவேடுகளை பார்வையிட்டார்.

கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்

பின்னர் காணை ஊராட்சியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பழனி, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ள தூரம் மற்றும் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை விவரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, குப்பம் ஊராட்சியில் ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 820 மதிப்பில் புதிய ஆழ்துளைக்குழாய் மற்றும் மின் மோட்டார், பிரதான பைப்லைன் விஸ்தரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளதை பார்வையிட்டார்.

அதன் பிறகு அகரம் சித்தாமூர் ஊராட்சியில் ரூ.28¼ லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட அவர், தரமான பொருட்களை கொண்டு பணிகளை மேற்கொள்ளவும், அப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படியும் உத்தரவிட்டார். தொடர்ந்து, அதே பகுதியில் ரூ.13 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளின் மனம் கவரும் வகையில் சுவர் ஓவியங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்களை அமைக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ரேஷன் கடையில்

மேலும் அகரம்சித்தாமூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் எடையளவை சரிபார்த்ததோடு, நடப்பு மாதத்தில் வழங்கப்பட்ட பொருட்களின் அளவு, இருப்பு நிலை பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைக்காமல் பொருட்களை விரைந்து வழங்கும்படி ரேஷன் கடை பணியாளருக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது உதவி பொறியாளர்கள் செந்தில்வடிவு, ஜெயப்பிரகாஷ், அப்துல்ரகீம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்