ஓமலூர் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு
ஓமலூர் பள்ளிகளில் காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார்.
காலை உணவு திட்டம்
ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
அப்போது, மாணவர்களுக்கு தயாரித்து வழங்கப்பட்ட காலை உணவு குறித்தும், அதன் தரம் எவ்வாறு இருக்கிறது? என்பது குறித்தும் அங்கிருந்த ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
செயல்பாடுகள் ஆய்வு
சேலம் மாவட்டத்திலுள்ள 1,418 தொடக்கப் பள்ளிகளில் படித்து வரும் ஒரு லட்சத்து 1,318 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் குழு சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகளில் நாள்தோறும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்கின்றனர்.
அந்தவகையில், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாங்குப்பை, நெரிஞ்சிப்பட்டி, ஆனைக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சுகாதார முறையில், சுவையான மற்றும் சத்தான உணவு தயாரித்து வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட்டது. மேலும் மாணவர்களிடம் உணவின் தரம் குறித்தும் கேட்டறியப்பட்டது.
அனைத்து பள்ளிகளிலும்...
இதேபோன்று சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து பள்ளிகளிலும் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் தினமும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சுழற்சி முறையில் தொடர்ந்து இதுபோன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு அறிக்கை அளித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.