அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு ஆஸ்பத்திரி
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு ஆகியவற்றை கலெக்டா் ஜெயசீலன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பிரசவ தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தாய்மார்களுக்கு வழங்கப்படும் படுக்கை வசதி, சாய்தள சிறப்பு படுக்கை வசதியாக ஏற்படுத்தி தருவதற்கு அறிவுறுத்தினார். இதன் மூலம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்று அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்ட பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் டயாலிசிஸ் பிரிவிற்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து, புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு கட்டிடத்தை ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
புதிதாக கட்டப்பட்டு வரும் ரத்த வங்கி கட்டிடத்தை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை அரங்கம், எலும்பு முறிவு பிரிவு, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சைகள் ஆகிய பிரிவுகளில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் கேட்டறிந்தார்.
அப்போது அங்கு சிகிச்சைக்கு வந்த வயிற்றில் ஓட்டை விழுந்த நபருக்கும், குடல்வாழ்வு அழுகிய நிலையில் இருந்த நபருக்கும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்வதற்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்கள் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆய்வின் போது இணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) முருகவேல், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு தலைமை மருத்துவர் காளிராஜ், மருத்துவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் ரெங்கசாமி, செவிலியர்கள், உதவி செயற்பொறியாளர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.