பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு
பெரம்பலூரில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆகிய 2 ஆண்டுகளாக பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருவதையும், கடந்த ஆண்டு 6 ஆயிரத்து 459 நபர்களுக்கு ரூ.57 கோடி மதிப்பீட்டில் கடன் வழங்கப்பட்டு அதனை தவணை தவறாமல் அனைத்து வாடிக்கையாளர்களும் குறித்த நேரத்தில் திருப்பி செலுத்தி சங்கத்தை 25 ஆண்டுகளுக்கும் மேலாக லாபகரமாக செயல்படுத்தி முதலீட்டாளர்களுக்கு பங்கு தொகை பிரித்து கொடுத்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயல்பாடுகள், நடவடிக்கைகள், பராமரிக்கும் முறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கற்பகம் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் தீர்மான புத்தகம், பொது பதிவேடு, தின ரொக்க புத்தக பதிவேடு, வைப்பு பதிவேடு, தொடர் நிலை வைப்பு பதிவேடு, சேமிப்பு கணக்கு பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்பு இச்சங்கத்தின் கீழ் நகர்ப்பகுதியில் இயங்கும் 4 முழு நேர ரேஷன் கடைகளின் செயல்பாடுகளும், புறநகர் பகுதியில் 10 முழு நேர மற்றும் 4 பகுதி நேர ரேஷன் கடைகள் செயல்பாடுகள் குறித்தும், கடைகளில் தற்போதைய இருப்பு, தேவை, விற்பனை பதிவேடுகள் ஆகியவை குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் பொதுமக்களுக்கு கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 914 சான்றிதழ்கள் வழங்கப்பட்டதையும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியன், கூட்டுறவு சங்க செயலாளர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.