முதியோர் இல்லங்கள்- குழந்தைகள் மையத்தில் கலெக்டர் ஆய்வு

முதியோர் இல்லங்கள்- குழந்தைகள் மையத்தில் கலெக்டர் ஆய்வு

Update: 2023-06-01 18:45 GMT

திருவாரூர் அருகே உள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் மையத்தில் கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளுக்கு தரமான உணவினை தயாரித்து வழங்க அறிவுறுத்தினார்.

கலெக்டர் ஆய்வு

திருவாரூரை அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள பாரதி முதியோர் இல்லத்தில் 21 முதியோர்களும், அம்மையப்பன் பகுதியில் உள்ள சேவா யோகா மாணவர் -முதியோர் இல்லங்களில் 45 முதியோர்களும் மற்றும் 4 மாணவர்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இல்லங்களில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார். அப்போது இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் முதியோர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், உணவு, மருத்துவம் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் சமையல்கூடம், குளியலறை, முதியோர்களை பராமரித்து வருவது தொடர்பான பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து இலவங்கார்குடி ஊராட்சி பகுதியில் உள்ளஅங்கன் வாடி மையத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு குறித்தும், குழந்தைகளின் உயரம், எடை குறித்தும், குழந்தைகளை பரிசோதிக்கும் முகாம் நடைபெறுவதையும் பார்வையிட்டார்.

தரமான உணவு தயாரித்து வழங்க வேண்டும்

விளமல் ஊராட்சியில் வட்டார வளமையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பதை பார்வையிட்டார். அப்போது குழந்தைகளுக்கு தரமான உணவினை தயாரித்து வழங்க வேண்டும் என்று அங்காடி மையங்களில் பயிற்சி பெறும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து தண்டலை ஊராட்சியில் உள்ள குழந்தைகள் மையத்தினையும், குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப்படும் சமையலறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, தாசில்தார் நக்கீரன் உள்ளிட்ட அதிகாாிகள் உடன் இருந்தனர்.

குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்ச்சி

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டு குறுங்காடுகள் அமைக்கும் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பதிவாளர் சுலோச்சனா சேகர், தேர்வுக்கட்டுப்பாட்டாளர் நாகராஜன், நூலகர் பரமேஸ்வரன், பல்கலைக்கழக குறுங்காடு திட்ட ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்