அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கலெக்டர் ஆய்வு

ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-04-18 18:45 GMT

நாகா்கோவில்:

ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

நாகர்கோவில் ராணிதோட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனைக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேற்று நேரில் சென்றார். பின்னர் அங்குள்ள தொழிற்கூடம் மற்றும் ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்றவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் 12 போக்குவரத்துக் கழக பணிமனைகளில் சேகரிக்கப்பட்ட அபாயகரமான கழிவுப்பொருட்கள் ராணித்தோட்டம் தொழிற்கூடத்தில் சேமித்து வைத்து அவற்றை அங்கீகரிக்கப்பட்ட சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது குறித்து போக்குவரத்துத்துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

குறிப்பாக பஸ்களில் இருந்து பெறப்படும் கழிவு ஆயில்களை சேமிப்பதையும், மறு சுழற்சிக்கு அனுப்பப்படுவதையும், டயர் புதுப்பித்தல் பிரிவில் வெளியேறும் டயர் துகள்களை சேமிப்பதையும் மறு சுழற்சிக்கு அனுப்பப்படுவதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கழிவு வெளியேறும் இடங்களை பார்வையிட்டு சுத்தமாக உள்ளதா என்பது குறித்தும், பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பராமரிப்பு பணிகள்

மேலும், முழு வருட தகுதி சான்று பெறும் பஸ்களில் செய்யப்படும் பராமரிப்பு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பாதுகாப்பான பஸ் இயக்கம் மற்றும் காற்று மண்டலத்தில் பஸ்சில் இருந்து வெளியேறும் புகை கலப்பதினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது உதவி மேலாளர் (தொழில்நுட்பம்) மதுக்குமார், உதவி மேலாளர் (தொழில்) அழகேசன், துணை மேலாளர் யுவராணி (பணி), உதவி மேலாளர் (கட்டிடம்) சிவகாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.

கல்லூரியில் ஆய்வு

தொடர்ந்து கோணம் அரசு பொறியியல் கல்லூரிக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் சென்றார். அங்கு மத்திய சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி காற்றின் தரம் குறித்து கண்டறிய பொருத்தப்பட்ட கருவியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கல்லூரி முதல்வர் நாகராஜ், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்