அன்னூர் நீரேற்று நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு உள்ள அன்னூர் நீரேற்று நிலையத்தில் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த திட்டத்தை இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-06-07 20:45 GMT

அன்னூர்

அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு உள்ள அன்னூர் நீரேற்று நிலையத்தில் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த திட்டத்தை இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ் பவானி ஆற்றில் உபரியாக செல்லும் தண்ணீரை வறட்சியான பகுதிக்கு கொண்டு செல்லும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1.50 டி.எம்.சி. தண்ணீரை நீரேற்று முறையில் எடுத்து அதை குழாய் மூலம் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 74 ஏரிகள், 971 குளம்-குட்டைகளுக்கு தண்ணீரை நிரப்பும் வகையில் மொத்தம் 1,065.3 கி.மீ. தூரத்துக்கு குழாய் அமைக்க வேண்டும். அதில் தற்போது வரை 1,065 கி.மீ. தூரத்துக்கு குழாய் அமைக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், நேற்று அன்னூர் வந்தார். பின்னர் அவர் அங்குள்ள குன்னத்தூரன்பாளையத்தில் அமைக்கப்பட்டு உள்ள நீரேற்று நிலையம், அன்னூர், எல்லப்பாளையத்தல் உள்ள குளங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் கருவி ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதுபோன்று இந்த குளங்களில் பொருத்தப்பட்டு உள்ள சிறப்பு கருவி மற்றும் நீரேற்று நிலையத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் நீர் வெளியேற்றத்தை இயக்க அமைக்கப்பட்டு இருக்கும் தானியங்கி கருவி ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

சோதனை ஓட்டம்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ் ரூ.1,624 கோடியே 82 லட்சத்தின் கீழ் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதற்காக 1,065.3 கி.மீ. தூரத்துக்கு குழாய் அமைக்க வேண்டும். தற்போது அதில் 1,065 கி.மீ. தூரத்துக்கு குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 300 மீட்டர் தூரத்துக்கு மட்டும்தான் குழாய் அமைக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் தற்போதுவரை 99 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகளை முடிக்கும் வகையில் வேகமாக நடந்து வருகிறது. மேலும் 1,045 குளங்களில் பொருத்தப்பட்டு உள்ள கருவிகளில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இதுவரை 600 குளங்களில் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாத இறுதிக்குள்...

கோவை மாவட்டத்துக்கு வரும் 258 குளங்களில் 122 குளங்களில் சோதனை ஓட்டம் முடிவடைந்து இருக்கிறது. அனைத்து சோதனை ஓட்ட பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு விடும். மேலும் இந்த திட்டததை இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முன்னதாக கலெக்டர் கிராந்திகுமார், கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பதிவேடுகள் அறை, ஆதார் மையம், இ-சேவை மையம் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து அன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்