வானூர் ஒன்றியத்தில்பள்ளி, அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு
வானூர் ஒன்றியத்தில் பள்ளி, அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றியம் தென்கோடிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் சி.பழனி, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வகுப்பறைகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கற்பித்தல் திறன், தமிழ், ஆங்கில வாசிப்புத்திறன், கணிதம், வாய்ப்பாடு போன்ற செயல்திறன் குறித்தும், 'எண்ணும் எழுத்தும்" திட்ட செயல்பாடுகள் குறித்தும் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து தென்கோடிப்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு வருகைபுரியும் குழந்தைகளின் எண்ணிக்கை விவரம், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் விவரம், ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான காரணங்களை அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்து, குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தை கண்டறிந்தார்.
ஊட்டச்சத்து உணவு
அப்போது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து விகிதத்தில் உணவுகளை தவறாமல் வழங்க வேண்டும். இக்குழந்தைகளின் பெற்றோர்களிடம் அங்கன்வாடி யைமத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகளை தவறாமல் வழங்க அறிவுறுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அதேபகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.24 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணியை மாவட்ட கலெக்டர்பழனி பார்வையிட்டு, தரமான முறையில் கட்டுமானப்பணியை மேற்கொள்ளவும், விரைந்து முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆரம்ப சுகாதார நிலையம்
பின்னர் கிளியனூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டு, சுகாதார நிலையத்திற்கு வருகைதரும் புறநோயாளிகளிடம் மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அதற்கு மருத்துவர்கள் சிறப்பான முறையில் சிகிச்சை அளிப்பதாக நோயாளிகள் தெரிவித்தனர்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரசவ அறை, பேறுகால முன்கவனிப்பு அறை, மருந்தகம், குடிநீர் வசதி, கழிவறை வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வளர்ச்சி பணிகள்
மேலும் அப்பகுதியில் 13-வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார ஆய்வகத்தையும், கொடூர் ஊராட்சியில், முதல்-அமைச்சரின் கிராம சாலை விரிவாக்க திட்டத்தின்கீழ் 1.35 கி.மீ தொலைவிற்கு ரூ.74.81 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியையும் மாவட்ட கலெக்டர் சி.பழனி பார்வையிட்டு பணிகளை தரமான முறையில் செய்யுமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவாசகம், நடராஜன், பொறியாளர்கள் பெருமாள், காமராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.