வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

கானாடுகாத்தான் மற்றும் பள்ளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-09 18:45 GMT

கானாடுகாத்தான் மற்றும் பள்ளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

கானாடுகாத்தான் மற்றும் பள்ளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் கண்மாய்கள் மற்றும் ஊருணிகள் சீரமைப்பு பணிகள், புதிய சாலை பணிகள், வள மீட்பு பூங்காக்களில் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை உள்ளிட்டவைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டுள்ள, தொடர வேண்டிய பணிகள் தொடர்பாக கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:- பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டும், நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் மற்றும் துறை ரீதியான அலுவலர்கள் வாயிலாக முறையான கள ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.

கானாடுகாத்தான் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் புது ஊருணி, ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கார்கூத்தான் ஊருணி மேம்பாட்டு பணி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம், ரூ.13.5 லட்சம் மதிப்பீட்டில் உரம் தயாரிக்கும் உலர் களம் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டமாக ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் வளம் மீட்பு பூங்காவில் ஆர்.ஆர்.சி. அமைத்தல் போன்ற ரூ.2 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

விரைந்து முடிக்க

பள்ளத்தூர் பேரூராட்சியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நவீன பஸ் நிறுத்தம், கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் சத்திரம் ஊருணி மேம்பாட்டு பணிகள் என மொத்தம் ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாகவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பணிகளை விரைந்து தரமான முறையில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது பேரூராட்சி தலைவர்கள் கானாடுகாத்தான் ராதிகா ராமச்சந்திரன், பள்ளத்தூர் சாந்தி சிவசங்கர், உதவி செயற்பொறியாளர் ரெங்கராஜ், உதவி பொறியாளர் அன்புச் செழியன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ரமேஷ் பாபு பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்