வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

எஸ்.புதூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-31 18:45 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார்.

திட்டப்பணிகள்

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு நடத்தினார். இதில் எஸ்.புதூர் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தலா 60 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபருக்கான மண்வரப்பு கட்டுதல் பணி, ரூ.1 லட்சம் மதிப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தி பணியாளர்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கடனுதவி

எஸ்.புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.23.94 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் சுற்றுச்சுவர் நிறைவு பணிகளின் நிலை குறித்தும், கிழவயல் ஊராட்சி மணியாரம்பட்டி கிராமத்தில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும், மேலவண்ணாரிருப்பு ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.7.50 லட்சம் மதிப்பிலான புதிய கலையரங்கத்தின் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலவண்ணாரிருப்பு கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பில் 6 பயனாளிகள் மூலம் ரூ.19 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு, அசோலா வளர்ப்பு குறித்தும் மேலும் 8 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மொத்தம் ரூ.55.25 லட்சம் மதிப்பீட்டில் தொழிற்கடனுக்கான காசோலைகள் என ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார்.

ரேஷன் கடையில் ஆய்வு

எஸ்.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருந்துகளின் இருப்பு, தேவையான மருத்துவ உபகரணங்கள், உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு, ஆய்வக பிரிவு ஆகியவைகளை ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனைக்கு வருகை தந்த பொதுமக்களிடம் சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் அங்குள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது எஸ்.புதூர் ஒன்றிய சேர்மன் விஜயா குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்குமார், சத்யன், உதவி செயற்பொறியாளர் முருகேஸ்வரி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உதவித்திட்ட அலுவலர் அன்புராஜா, வட்டார இயக்க மேலாளர் மணிமாறன், இந்தியன் வங்கி மேலாளர் கவியரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்