ரூ.1,752 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள்-கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.1752 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-06 18:45 GMT

திருப்புவனம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.1752 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.

கூட்டு குடிநீர் திட்டம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீரினை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2,452 ஊரக குடியிருப்புகள் மற்றும் 3 நகராட்சிகளுக்கான மொத்த ஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த மொத்தம் ரூ.1752.73 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உதவியின் கீழ் ரூ.1537.59 கோடி மற்றும் மாநில அரசின் பங்களிப்பு ரூ.215.14 கோடி ஆகும். குளித்தலை அருகில் காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு இந்த கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

குழாய்கள் பதிக்கும் பணி

மாவட்டம் முழுவதும் நடைபெறும் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் தொடர்பாக மானாமதுரை நகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் நடைபெற்று வரும் கட்டுமான நிலைகள் மற்றும் தரம் ஆகியவைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தில் தலைமையிடத்தில் மொத்தமுள்ள 5 கிணறுகளில், 3 கிணறுகளுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நீருந்து குழாய்கள் மற்றும் தன்னோட்ட குழாய்கள், பிரிவு குழாய்கள் என மொத்தம் உள்ள 4601 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 3402 கிலோ மீட்டர் நீளமுள்ள பைப்லைன் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைந்து முடிக்க

385 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கு 343 முடிக்கப்பட்டும், 758 மேல்நிலைத் தொட்டிகளுக்கு 514 முடிக்கப்பட்டும், 391 விசைப்பம்பு அறைகளுக்கு 273 முடிக்கப்பட்டும் எஞ்சியுள்ள தொட்டிகளுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் அயினான், சிவகங்கை திட்டக்கோட்ட நிர்வாக பொறியாளர் ஆறுமுகம், மானாமதுரை திட்டக்கோட்ட உதவி நிர்வாக பொறியாளர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்