தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் தொடங்குதல், புதிய தொழிற்பிரிவுகள், தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல், அங்கீகாரத்தை புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 11:59 மணி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற் பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற் பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தையும் ஒரே விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வு கட்டணத்தை RTGS அல்லது NEFT மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணமாக ரூ.5000 மற்றும் ஆய்வு கட்டணமாக ரூ.8000 செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.