தடங்கத்தில் வருகிற 21-ந் தேதி 800 காளைகள், 1,000 வீரர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு-முன்னேற்பாடுகளை கலெக்டர் சாந்தி ஆய்வு

Update: 2023-01-17 18:45 GMT

தர்மபுரி:

தடங்கத்தில் வருகிற 21-ந் தேதி 800 காளைகள், 1,000 வீரர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.

ஜல்லிக்கட்டு போட்டி

தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை, அதியமான் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பொங்கல் பண்டிகை மற்றும் மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் பங்கேற்கின்றன. 1,000 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்க வசதியாக பிரம்மாண்ட கேலரி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாடிவாசல் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை காண பொதுமக்கள் வரும் வழி, காளைகள் அழைத்து வரப்படும் வழி மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் சாந்தி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று போட்டி ஏற்பாட்டாளர்களிடம் அவர் அறிவுறுத்தினார். போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மைதானத்தில் இருந்து வெளியே செல்ல தனி வழி அமைக்கப்பட்டுள்ளதா? என்று கலெக்டர் ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் அமர்வதற்கு அமைக்கப்படும் கேலரிகள் பாதுகாப்பாக அமைக்க வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பான முறையில் நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆய்வின் போது தா்மபுாி உதவி கலெக்டர் கீதா ராணி, நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்