கிராம ஊராட்சிகளில்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகலெக்டர் ஆய்வு

கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியை கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-12-30 18:45 GMT


கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்கும்பொருட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 13 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 688 ஊராட்சிகளில் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்யும் பணிகள் நேற்று காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனங்குப்பம், சாலை அகரம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுகாதாரமான குடிநீர்

விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 688 ஊராட்சிகளில் உள்ள 2,286 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு 3,689 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 7,562 சிறிய அளவிலான குடிநீர் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு 2,280 பணியாளர்களும், சிறிய அளவிலான குடிநீர் தொட்டிகளுக்கு 1,672 பணியாளர்கள் மூலமும் தண்ணீர் நிரப்பப்பட்டு சீராக வினியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்களின் மிகவும் அத்தியாவசிய தேவையான குடிநீரை சுகாதாரமான முறையில் வழங்கும்பொருட்டு மாவட்டம் முழுவதும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு அப்பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வட்டார அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

அறிவுரை

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சரியான அளவில் குளோரின் கலந்து பொதுமக்களின் தேவைக்கேற்ப சுத்தமான குடிநீரை வினியோகம் செய்யவும், சுத்தம் செய்யும் பணியை விரைந்து முடித்து நீரை தேக்கி வினியோகம் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பொன்னம்பலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, அனந்தலட்சுமி, தாசில்தார் ஆனந்தகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்