கொள்ளிட கரையோர கிராமங்களில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் உபரிநீர் திறக்கப்படுவதால் கொள்ளிட கரையோர கிராமங்களில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மக்களை அறிவுறுத்தினார்.

Update: 2022-10-16 19:56 GMT

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் உபரிநீர் திறக்கப்படுவதால் கொள்ளிட கரையோர கிராமங்களில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மக்களை அறிவுறுத்தினார்.

கலெக்டர் ஆய்வு

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் கூடுதலாக திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளாங்குடியில் கொள்ளிடம் கரையோரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெள்ள அபாய எச்சரிக்கை

அப்போது அவர், ஒலிபெருக்கி மூலம் கொள்ளிடம் ஆற்றில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த தொழிலாளர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, கரைக்கு ஆடுகளுடன் வரும்படி அறிவுறுத்தினார். பின்னர் வைத்தியநாதன் பேட்டைக்கு சென்ற அவர், அங்குள்ள மக்களை சந்தித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து இன்று (நேற்று) 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிகளவு நீர்வரத்து உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் தற்போது 1 லட்சம் கன அடி அளவுக்கு வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.

நிவாரண முகாம்கள்

ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக வெள்ள நிவாரண முகாம்களை ஏற்படுத்தி வருகிறோம்.

நாளை (இன்று) 2 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றங்கரையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தங்களது கால்நடைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், உதவி பொறியாளர்கள் பூங்கொடி, ராஜ்குமார், திருவையாறு தாசில்தார் பழனியப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்