அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை
அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.
அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கைராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 யூனியனுக்கு உட்பட்ட 429 ஊராட்சிகளிலும் குடிநீர் வினியோகம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட 33 ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் குறித்து ஊராட்சி தலைவர்களுடன் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர் கூறியதாவது:- காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ஆழ்துளை, திறந்தவெளி கிணறுகள் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகளுக்கு முழுமையாக காவிரி குடிநீர் செல்கிறது. கடைக்கோடி பகுதிகளுக்கு முழுமையாக செல்வதில்லை.
மக்களுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறையினர் ஒருங்கிணைந்து சென்னையில் உள்ள நீர்வள ஆதார ஆராய்ச்சியாளர் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தில் வறட்சியான பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பணிகளை விரைந்து முடித்து அனைத்து ஊராட்சியிலும் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு குடிதண்ணீர் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஊராட்சி தலைவரும் தங்கள் பகுதிக்கு எந்த அளவிற்கு தண்ணீர் கிடைக்கிறது. மேலும் எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதை திட்டமிட்டு ஆய்வு அலுவலர்கள் வருகையின் போது தெரிவித்து அவர்களுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் நீர்வள ஆதார துறை விஞ்ஞானிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குடிநீர் திட்ட பணிகளுக்கான திட்டமிடுதல் குறித்து விளக்க உரை ஆற்றினர்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, ஊராட்சி உதவி இயக்குனர் பரமசிவம், திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், கணேஷ்பாபு, 33 ஊராட்சி தலைவர்கள், நீர்வள ஆதார துறையினர், குடிநீர் வடிகால் வாரியத்தினர், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.