ஊராட்சி, பேரூராட்சிகளில் பெண் சமையலர்கள் நியமனம்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் காலை உணவு சமைத்திட பெண் சமையலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் காலை உணவு சமைத்திட பெண் சமையலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
காலை உணவு திட்டம்
இது தொடர்பாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு சமைத்திட பெண் சமையலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த தற்காலிக பணிக்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறப்பாக செயல்பாட்டில் உள்ள அனுபவம் வாய்ந்த குழுவின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
விண்ணப்பித்தவர் எந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கு விண்ணப்பிக்கின்றாரோ அதே கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். சமையல் செய்வதில் முன்அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். விண்ணப்பித்தவர் பெயரில் இணையதள வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்கவும், பயன்படுத்த தெரிந்திருக்கவும் வேண்டும்.
கடும் நடவடிக்கை
விண்ணப்பம் செய்பவர் உறுப்பினராக உள்ள குழு கடந்த மூன்றாண்டுகளில் பெற்ற எவ்வகையான கடனையும் திரும்ப செலுத்துவதில் தவறி வாராக்கடன் உள்ள குழுவாக இருக்க கூடாது. தேர்ந்தெடுக்கப்படும் சுய உதவிக்குழு காலைச்சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த போதுமான நிதி வசதி உள்ள குழுவாக இருக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒரு பள்ளிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டு சமையல் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பித்தவரின் குழந்தைகள் அதே அரசு ஆரம்ப பள்ளிகளில் படிப்பவர்களாக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
இதற்காக ஊராட்சி, பேரூராட்சி அளவில் அமைக்கப்பட்ட குழுவினர் தகுதியானவர்களை தேர்வு செய்வார்கள். இந்த பணி குறித்து இடைத்தரகர் எவரேனும் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.