மாற்றுத்திறனாளிகள் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கைகள், இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளிகள் மின்கலத்தினால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கைகள், இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளிகள் மின்கலத்தினால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சக்கர நாற்காலிகள்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தசைச்சிதைவு நோய், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களும் செயலிழந்த 60 வயதிற்குட்டபட்ட ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கும், 55 வயதிற்குட்டபட்ட பெண் மாற்றுத்திறனாளிகளுக்கும் பேட்டரியால் இயங்கக்கூடிய சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்ட குறைபாடுகள் உடைய மாற்றுத்திறனாளிகள் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற்றிட விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மார்பளவு புகைப்படம் ஆகியவைகளை இணைக்கவேண்டும். மேலும், கல்வி பயிலும், பணிபுரியும், சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உடையவர்கள் உரிய சான்றுகளுடன் வருகிற 16-ந் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.