ரேஷன்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம்
ரேஷன்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்படுவதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
ரேஷன்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்படுவதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசி
மத்திய அரசின் முன்னேறிவரும் மாவட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் விதமாக செறிவூட்டப்பட்ட அரிசியை, பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பி.எம். போஜன் மதிய உணவு திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கவும் மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மூலம் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த ஆண்டு 2023 மார்ச் மாதம் முதல் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
அரசின் சார்பில் சாதாரண நலிவடைந்த மக்களின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்தவும், பொது சுகாதார நலன்களை கருத்தில் கொண்டு உணவு பொருள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே சாதாரண நலிவடைந்த மக்கள் இந்த அரிசியை பொது வினியோக திட்டத்தின் மூலம் பெற்று பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.