பண்ணை குட்டைகளை பதிவு செய்யலாம்

மீன் வளர்ப்போர் மற்றும் மீனவர்கள், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் உறுப்பினராக சேர்வதற்கு தங்களது பண்ணை குட்டைகளை பதிவு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்

Update: 2022-09-30 18:45 GMT

மீன் வளர்ப்போர் மற்றும் மீனவர்கள், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் உறுப்பினராக சேர்வதற்கு தங்களது பண்ணை குட்டைகளை பதிவு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மீன் வளர்ப்பு

சிவகங்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள பிரவலூர் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் தற்போது கையிருப்பில் 7 லட்சம் ரோகு விரலிகள், 80 ஆயிரம் கட்லா விரலிகள் மற்றும் 40 ஆயிரம் மிர்கால் விரலிகள் உள்ளன. சிவகங்கை மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்த பயனாளிகளுக்கு ரோகு மற்றும் மிர்கால் 1,000 மீன் விரலிகள் ரூ.400-க்கும், கட்லா 1,000 மீன் விரலிகள் ரூ.500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு மேற்படி தொகையில் 20-சதவீதம் கூடுதலாகவும், தனியார் மற்றும் கண்மாய் குத்தகைதாரர்களுக்கு மேற்படி தொகையில் 50 சதவீதம் கூடுதலாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பதிவு செய்யலாம்

எனவே, மீன்வளர்ப்போர் மற்றும் மீனவர்கள் சிவகங்கை மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் உறுப்பினராக தங்களது பண்ணை குட்டைகளை பதிவு மேற்கொண்டு பயன்பெறலாம்.

மேலும், மீன்விரலிகளை வாங்கி பயன்பெற விரும்பும் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர் பிரவலூர் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணை, ஒக்கூர், சிவகங்கை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்