நவீன சலவையகங்கள் அமைக்க நிதி உதவி; கலெக்டர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நவீன சலவையகங்கள் அமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-02 16:58 GMT

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கேற்பவும், 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, நவீன சலவையகங்கள் அமைக்க ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, தேனி மாவட்டத்தில் நவீன சலவையகங்கள் அமைக்க பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தகுதியான குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை www.theni.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 20-ந் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்