19 பேருக்கு நலத்திட்ட உதவிகள்-குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 19 பேருக்கு ரூ.17 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.

Update: 2023-08-14 19:18 GMT

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 19 பேருக்கு ரூ.17 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 461 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் காளையார்கோவில் தாலுகாவில் 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.14.70 லட்சம் மதிப்பீட்டிலான சமுதாய முதலீட்டு நிதியினையும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் இளையான்குடி தாலுகாவில் ஓரு பயனாளிக்கு ரூ.1 லட்சம் நிவாரண தொகையும், காரைக்குடி தாலுகாவில் 2 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.42,500-ம் மதிப்பீட்டிலான இயற்கை மரண உதவித்தொகையும், அபுதாபியில் இறந்தவரின் வாரிசுதாரருக்கு இறப்பு இழப்பீட்டு தொகையாக ரூ.1½ லட்சத்திற்கான காசோலை உள்ளிட்ட 19 பயனாளிகளுக்கு ரூ.17.70 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், சமூகப்பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்