முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-20 22:17 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட சின்னவளையம், மணக்கரை, மலங்கன்குடியிருப்பு, ஜெயங்கொண்டம் (தெற்கு) மற்றும் (வடக்கு), கீழக்குடியிருப்பு, கொம்மேடு, செங்குந்தபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகள் மற்றும் ஜெயங்கொண்டம் ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி ஆகிய 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 464 மாணவ, மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சி, மேலக்குடியிருப்பு நடுநிலைப்பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுவதை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களுக்கு உணவினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சரியான நேரத்திலும் தொடர்ந்து தயார் செய்து வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட மேலக்குடியிருப்பில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு தயாரிக்கப்படும் உணவின் முறை, உணவின் தரம், உணவு மூலப்பொருட்கள் இருப்பு மற்றும் அவற்றின் தரம், சரியான நேரத்திற்கு உணவினை பள்ளிகளுக்கு கொண்டு செல்லுதல் போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து நேரில் பார்வையிட்டும், கேட்டறிந்தும் ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினையும் சாப்பிட்டு உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம், தாசில்தார் துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்