இந்து அமைப்புகளுடன் கலெக்டர் ஆலோசனை
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க அனுமதியில்லை என்று கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்து உள்ளார்.
கோவை
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்க அனுமதியில்லை என்று கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து இந்து அமைப்புகளுடனான ஆலோசனை கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சண்முகம் (தெற்கு), சந்தீஷ் (வடக்கு), ராஜராஜன் (போக்குவரத்து), வருவாய் அதிகாரி ஷர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கி கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைக்கும் அமைப்பினர் மாநகராட்சி பகுதியில் சம்பந்தப்பட்ட போலீஸ் உதவி கமிஷனரிடமும், பிற இடங்களில் சப்-கலெக்டர் அல்லது வருவாய் கோட்டாட்சியரிடம் தடையின்மை சான்று பெற்று இருக்க வேண்டும். சிலை நிறுவப்படும் இடம் தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளர்களிடமும், அரசு புறம்போக்கு நிலம் என்றால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் இருந்து தடையின்மை சான்று பெற்று சிலை வைக்க வேண்டும்.
தீ தடுப்பு வசதி
போலீசாரிடம் அனுமதி பெற்றே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும். போதிய தீ தடுப்பு வசதி செய்திருக்க வேண்டும். இதற்கான சான்றை தீயணைப்பு துறையினரிடம் பெற்றிருக்க வேண்டும். விநாயகர் சிலைகளை சுமந்து செல்லும் வாகனத்தில் பயணம் செய்யும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை மோட்டார் வாகனச் சட்டத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.
விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடங்கள் மற்றும் ஊர்வலமாக கொண்டு செல்லும் பாதைகளில் பட்டாசு வெடிபொருட்களை பயன்படுத்த அனுமதியில்லை. சிலைகளை நீரில் மூழ்கடிப்பதற்கு முன்பாக மலர்கள், துணிகள் மற்றும் அலங்கார பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை தனியாக பிரித்தல் வேண்டும்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகளை முத்தண்ணன்குளம், பவானி ஆறு (சிறுமுகை, எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி)., அம்பராம்பாளையம் ஆறு, நொய்யல் ஆறு, உப்பாறு, நடுமலை ஆறு, ஆனைமலை முக்கோணம் ஆறு, பழத்தோட்டம், சிறுமுகை, சாடிவயல், வாளையார் அணை, ஆத்துப்பாறை, ஆழியாறு, குறிச்சி குளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளத்தேரி, வெள்ளக்கிணறு குளம் ஆகிய இடங்களில் மட்டும் விசர்ஜனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் சதீஷ், தனபால், அரசு துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகளுடன் ஆலோசனை நடைபெற்றது.