ஓமலூர் அருகே ரேஷன் கடையில் கலெக்டர் கார்மேகம் நேற்று திடீரென ஆய்வு செய்தார்.
ரேஷன் கடை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ரேஷன் கடையில் உள்ள இருப்பு விவரங்கள் குறித்து விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அந்த கடையில் மொத்த ரேஷன்கார்டுகள் எண்ணிக்கை, மாதந்தோறும் பொருட்கள் வினியோகம் குறித்த பதிவேடுகளை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார். மேலும் பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
தரமான அரிசியா?
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியை தினமும் மாதிரி சேகரித்து, அதனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு தர கட்டுப்பாட்டு அலுவலர், கூட்டுறவுத் துறை ஆய்வு அலுவலர்கள், முதன்மைச் சங்கங்களின் பணியாளர்கள் ஆகியோரால் தரம் சரிபார்க்கப்பட வேண்டும். அதன்பிறகு தரமான அரிசியினை மட்டுமே ரேஷன் கடைகளுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் அரிசியினை தரம் சரிபார்த்து, தரமான அரிசி மட்டுமே பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுவதை உறுதி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 1,714 ரேஷன் கடைகள் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வாகனப்போக்குவரத்து குறைவாக உள்ள பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகளில் நடமாடும் ரேஷன் கடைகள் (வாகனம்) மூலம் அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் சென்று, பொதுமக்கள் எளிதில் பெற்றுக்கொள்ளும் வகையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.