முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வென்றவீரர், வீராங்கனைகளுக்கு கலெக்டர் பாராட்டு
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வென்றவீரர், வீராங்கனைகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
சேலம்
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு கலெக்டர் கார்மேகம் பாராட்டு .
முதல்-அமைச்சர் கோப்பை
சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், நீச்சல், கூடைப்பந்து, கைப்பந்து, மேஜைப்பந்து, இறகுப்பந்து, கிரிக்கெட், தடகளம், கால்பந்து, கபடி, சிலம்பம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு 657 வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். இவர்கள் வருகிற 25-ந் தேதி வரை சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்குபெற சென்றுள்ளனர்.
இதுதவிர, முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பள்ளி பிரிவை சேர்ந்த கபடி, கைப்பந்து ஆண், பெண் அணிகளும், பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த சிலம்பம் ஆண், பெண் அணிகள் என 64 மாணவ, மாணவிகள் சேலத்தில் இருந்து சென்னை சென்றனர்.
வெள்ளிப்பதக்கம்
இந்நிலையில், சென்னையில் நடந்து வரும் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கல்லூரி அளவில் நடந்த சுருள்வாள் வீச்சு போட்டியில் சேலத்தை சேர்ந்த மாணவர் ஜாக்சன் வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகையும், அலங்கார வீச்சு போட்டியில் மாணவர் குமரேசன் வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்று வென்றுள்ளனர்.
இதேபோல் சுருள்வாள் வீச்சு பிரிவில் மல்லூர் அரசு பள்ளி மாணவர் கிருஷ்ணமூர்த்தி வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகையும், மேச்சேரி அரசுப்பள்ளி மாணவி ஓவியா ஸ்ரீ வெண்கலப்பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையும், கல்லூரி பிரிவில் மாணவி ஜெனிபர் வெண்கலப்பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
கலெக்டர் பாராட்டு
மாநில அளவில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் சிலம்பம் பிரிவில் சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை பெற்று வந்துள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் அவர்களை கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சிவரஞ்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.