பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்களை பணியில் ஈடுபடுத்தினால் நடவடிக்கை-கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை

பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்களுக்கு முன்பணம் செலுத்தி பணிக்கு ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-05-11 19:45 GMT

ஊட்டி

பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்களுக்கு முன்பணம் செலுத்தி பணிக்கு ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காலாண்டு கூட்டம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் காலாண்டு கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்

அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர்களுக்கு முன்பணம் செலுத்தி பணிக்கு ஈடுபடுத்தினால் கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்ட நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறைவாக ஊதியம் வழங்கி பணியில் ஈடுபடுத்தினால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதன்மையான பணியாகும்.

கட்டணமில்லா தொலைபேசி எண்

கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான மாநில அளவிலான கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (18004252650) அதிக அளவு பொதுமக்கள் கூடுமிடங்களில் பார்வைக்கு வைக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் இருப்பின் பொதுமக்கள் மேற்கண்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு கட்டுமான நலவாரியங்களின் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர் விபத்து மரணம் அடைந்தமைக்காக உதவித்தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இதில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின், குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர் உள்பட பலன் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்