காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்-கலெக்டர் அறிவுரை
காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என திருப்பத்தூரில் டெங்கு தடுப்பு மருத்துவமுகாமை தொடங்கி வைத்தபின் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்தார்.
காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என திருப்பத்தூரில் டெங்கு தடுப்பு மருத்துவமுகாமை தொடங்கி வைத்தபின் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்தார்.
சிறுமி பலி
திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையில் அபிநிதி என்ற சிறுமி டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தாள். இதையடுத்து திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையில் நேற்று டெங்கு தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த பகுதியில் டெங்கு பாதிக்கப்பட்டு சிறுமி இறந்துளங்ளாள். இங்கு அனைவருக்கும் அனைத்து பரிசோதனைகளுடன் மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம் மூலம் வேறு யாருக்காவது டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முகாம் தொடர்ந்து நடத்தப்படும்.
அரசு ஆஸ்பத்திரிக்கு...
யாருக்காவது டெங்கு அல்லது காய்ச்சல் ஏற்பட்டால் அரசு ஆஸ்பத்திரிக்கு உடனே செல்ல வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்து குறித்து முதல்- அமைச்சர், தலைமை செயலாளர், சுதாதாரத்துறை செயலாளர் ஆகியோர் காணொலி காட்சி மூலம் அறிவுரை வழங்கி வருகின்றனர். நாம் சேமிக்கின்ற தண்ணீர் சரியான முறையில் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்பதே டெங்குவை ஒழிப்பதன் அடிப்படையாகும்
மாவட்டம் முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை டெங்கு காய்ச்சல் அதிகமாக வருவதற்கு சாத்திக்கூறுகள் இருக்கின்றது. இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகத்திடம் இவ்வாறு மெத்தன போக்கு இருக்க கூடாது எனவும், சுகாதார சீர்கேடுகளை சரிசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீடுகளின் அருகே மழைநீர், தூய நீர் தேங்காதவாறு பொதுமக்கள் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு
பின்னர் அந்த பகுதியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, நகர்ப்புற அரசு ஆரம்ப சுகதார நிலைய மருத்துவ அலுவலர் ராம்பாலாஜி உள்பட பலர் உடன் இருந்தனர்.