சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தீபாவளியை கொண்டாட வேண்டும்- கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தீபாவளியை கொண்டாட வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-10-17 18:45 GMT

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தீபாவளியை கொண்டாட வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுற்றுச்சூழல் மாசு

தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்த திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றி உள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலியாலும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது.

பசுமை பட்டாசுகள்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. எனவே தீபாவளியை பண்டிகையை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் கொண்டாட வேண்டும்.

அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசுப்படுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

சரவெடிகளை தவிர்க்க வேண்டும்

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்திரிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்