எருமப்பட்டி அருகேமாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் உமா பங்கேற்பு
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் கலெக்டர் உமா கலந்து கொண்டார்.
சிறப்பு மருத்துவ முகாம்
எருமப்பட்டி அருகே அலங்காநத்தம் பிரிவு ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா கலந்து கொண்டு எலும்பு முறிவு சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு டாக்டர்கள் உரிய பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்தார். முகாமில் 220 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், புதிய மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை பதிவு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள், ஆலோசனை வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
இதனை தொடர்ந்து ஒரு மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள், 2 பேருக்கு ஊன்று கோல்கள், 2 பேருக்கு கண் கண்ணாடியும், 3 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை என மொத்தம் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் நாமக்கல் வருவாய் உதவி கலெக்டர் சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) சந்திரமோகன், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், டாக்டர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.