கிருஷ்ணகிரியில்மாங்கனி விலை நிர்ணயம் குறித்த முத்தரப்பு கூட்டம்கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது

Update: 2023-05-05 19:00 GMT

கிருஷ்ணகிரியில் மாங்கனிகள் விலை நிர்ணயம் குறித்த முத்தரப்பு கூட்டம் நேற்று நடந்தது.

முத்தரப்பு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகவரித்துறை சார்பில் மாங்கனிகளுக்கு விலை நிர்ணயம் குறித்த முத்தரப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு விவசாயிகள் மாங்காய்களை கொண்டு வந்திருந்தனர். அதனை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் விவசாயிகள் பேசியதாவது:- இந்த ஆண்டில் மகசூல் பாதிப்பால் விளைச்சல் குறைந்துள்ளது. வருவாய் இழப்பு காரணமாக மா மரங்களை விவசாயிகள் அழித்து வரும் நிலையில் உள்ளூர் மா விவசாயிகளை காக்க மாவட்ட நிர்வாகம், மாங்கூழ் தொழிற்சாலை நிர்வாகத்தினர் முன்வர வேண்டும். மேலும் மாவிற்கு குறைந்தபட்சம் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை வழங்க வேண்டும் என்று பேசினர்.

தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

கொள்முதல் விலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அல்போன்சா, மல்கோவா, இமாம் பசந்த், பங்கனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு ரக மாங்காய்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் பெங்களூரா, அல்போன்சா ரக மாங்காய்கள் கூழ் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் 24 மாங்கூழ் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 2.5 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழ கூழ் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு 5 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் தேவைப்படுகிறது.

இந்த ஆண்டில் விவசாயிகளின் நலன்கருதி கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாம்பழ கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள் கொள்முதல் விலையை படிபடியாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லாம், தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி, வேளாண் விற்பனை மற்றும் வணிகவரித்துறை துணை இயக்குனர் காளிமுத்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, புள்ளியியல் அலுவலர் குப்புசாமி மற்றும் மா விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்