தர்மபுரியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு ரெயில் நிலைய தார்சாலையை தரமாக அமைக்க உத்தரவு

தர்மபுரியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு ரெயில் நிலைய தார்சாலையை தரமாக அமைக்க உத்தரவு

Update: 2022-09-29 18:45 GMT

தர்மபுரி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தர்மபுரி ரெயில் நிலைய தார் சாலையை தரமாக அமைக்க வேண்டும் என்று அப்போது அவர் உத்தரவிட்டார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

தர்மபுரி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தர்மபுரி பஸ் நிலையம் அருகில் உள்ள முகமது அலி கிளப் சாலையில் பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு நிதியுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அடித்தளம், தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய புதிய வணிக வளாகம் கட்டும் பணி, சந்தைபேட்டை பகுதியில் கலைஞரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

இதை தொடர்ந்து அன்னசாகரம் பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரோக்கிய மையம் கட்டும் பணியை ஆய்வு செய்தார். தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலை மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளது.

தரமாக அமைக்க வேண்டும்

இந்த சாலையை பார்வையிட்ட கலெக்டர், தார்சாலையை தரமான முறையில் அமைத்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நகராட்சி பகுதியில் மொத்தம் ரூ.24 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 112 வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்த நேரத்தில் தரமான முறையில் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது தர்மபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், உதவி பொறியாளர் தவமணி, சுகாதார ஆய்வாளர்கள் சுசீந்திரன், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்