எருமப்பட்டி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

எருமப்பட்டி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-08-25 17:34 GMT

எருமப்பட்டி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் தொடக்கமாக அ.மேட்டுப்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு குடியிருப்போர்களிடம் கலந்துரையாடினார். அ.மேட்டுப்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரம் 1998-ம் ஆண்டு 100 வீடுகளுடன் கட்டப்பட்டது.

தற்போது இந்த சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் தரை பழுது பார்த்தல், சுவர்கள், கான்கிரீட் மேற்கூரை ஆகியவற்றில் பழுது பார்த்தல் மற்றும் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

சமத்துவபுரம்

மேலும் சமத்துவபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, விளையாட்டு மைதானம், நுழைவாயில் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் மற்றும் சாலை மேம்பாட்டு பணி உள்ளிட்டவை மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து அ.மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.1½ லட்சம்மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதை பார்வையிட்டு, அப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்து பாடப்புத்தகங்களை வாசிக்க செய்தும், கதைகள் மற்றும் பாடல்களை பாடச்சொல்லியும் ஆய்வு செய்தார். நன்றாக தங்களது கற்றல் திறனை வெளிப்படுத்திய மாணவிகள் இருவருக்கு பரிசு வழங்கினார்.

வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.2¼லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதையும், திப்ரமாதேவி ஊராட்சி அருந்ததியர் காலனியில் கழிவு நீர் கால்வாயில் வரும் நீரை வடிக்கட்டி சுத்திகரிப்பு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள அமைப்பினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்