தர்மபுரியில்மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிக்கான விழிப்புணர்வு ஊர்வலம்கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணிக்கான விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கணக்கெடுக்கும் பணி
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கட்டுபாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக ஆண்ட்ராய்டு செல்போன் செயலி மூலம் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு, சமூக தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுக்கும் பணி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 12-ந் தேதி வரை மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணிக்கான 3 சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு பிரசார வாகனம் மற்றும் தெருமுனை கலைநிகழ்ச்சி பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பிரசாரத்தை கலெக்டர் சாந்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர வாகனங்களில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலம் நகரின் பல்வேறு பகுதிகளில் சென்றது.
கலெக்டர் கள ஆய்வு
இதையடுத்து நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தடங்கம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணியினை கலெக்டர் சாந்தி நேரடி கள ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் கணக்கெடுக்கும் பணிக்கான விழிப்புணர்வு பிரசார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் செண்பகவள்ளி, மாநில உரிமைகள் திட்ட மேலாளர் பிலிப்ஸ், திட்ட அலுவலர் அனிதா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.