ஓசூரில் நடந்த முகாமில் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: கலெக்டர் சரயு வழங்கினர்

முகாமில், தகுதி வாய்ந்த 78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

Update: 2023-08-20 19:00 GMT

ஓசூர்:

ஓசூரில் நடந்த முகாமில் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை கலெக்டர் சரயு வழங்கினர்.

ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில், தகுதி வாய்ந்த 78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை, கலெக்டர் சரயு, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் வழங்கினர்.

மேலும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள், 2 பேருக்கு ரூ.19,400 மதிப்பிலான சக்கர நாற்காலிகள் மற்றும் 3 பேருக்கு ரூ.6,600 மதிப்பிலான ஊன்றுகோல்களை வழங்கினர். தொடர்ந்து, 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்க்கும் சிறப்பு முகாமை, கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் சரயு கூறுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சிறப்பு முகாமில், அஞ்செட்டி தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி, ஓசூர் பகுதிகளில் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் பல்வேறு பரிசோதனை மேற்கொண்டனர். கிருஷ்ணகிரியில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அடுத்த (செப்டம்பர்) மாதம் 2-ந் தேதி இந்த முகாம் நடைபெறுகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.

மேலும் இந்த முகாமில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர் சரண்யா, துணை மேயர் ஆனந்தய்யா, துறை அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்