கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்தில் ரூ.1000 பெற விண்ணப்பம் வினியோகம்
கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்தில் ரூ.1000 பெற விண்ணப்பம் வினியோகத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்தில் ரூ.1000 பெற விண்ணப்பம் வினியோகத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்தார்.
குடும்பத்தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்ற பெயரில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பல்லடம் வடுகபாளையம் பகுதியில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில் "திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகின்ற 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் ஆகஸ்டு 16-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக அனைத்து முகாம்களும் ரேஷன் கடைகளுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள் அல்லது அரசு கட்டிடங்களில் நடைபெறும். விண்ணப்ப பதிவு முகாம்களில் ரேஷன் கடை பணியாளர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினை சேர்ந்தவர்கள் என 7082 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். விண்ணப்பத்தை பெற பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வரவேண்டிய தேவை இல்லை என்று அவர் தெரிவித்தார்.