கோவில் பெயரில் நன்கொடை வசூலிப்பு: கார்த்திக் கோபிநாத் மீதான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை

சிறுவாச்சூர் கோவில் பெயரில் நன்கொடை வசூலித்ததாக கார்த்திக் கோபிநாத் மீது போலீஸ் பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என்றும், அதேநேரம் அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை அனுமதியின்றி தாக்கல் செய்யக்கூடாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-24 22:34 GMT

சென்னை,

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிகளுக்காக சமூக வலைதளம் மூலம் பணம் வசூலித்து முறைகேடு செய்ததாக ஆவடியைச் சேர்ந்த கார்த்திக் கோபிநாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு பூந்தமல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்தநிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கார்த்திக் கோபிநாத் மனு தாக்கல் செய்தார்.

பொய் வழக்கு

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கார்த்திக் கோபிநாத்தின் வங்கிக்கணக்கு விவரங்களுடன் பதில்மனு தாக்கல்செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 'வங்கிக்கணக்கு ஆவணம் கிடைக்க காலதாமதம் ஆவதால், விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வக்கீல் ராகவாச்சாரி, 'எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் மனுதாரர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர்' என்று வாதிட்டார். அதையடுத்து, மனுதாரர் மீதான வழக்கு விசாரணைக்கு நீதிபதி இடைக்கால தடை விதித்தார்.

அதிகாரியிடம் அனுமதி

அடுத்த சில நிமிடத்தில் நீதிபதி முன்பு மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன்முகமது ஜின்னா ஆஜராகி, 'இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்தால், புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படும். வழக்கின் குற்றம் தீவிரமானது' என்று கூறினார். அப்போது நீதிபதி, 'இந்த வழக்கில் கோவில் செயல் அதிகாரியிடம் நன்கொடை வசூலிக்க அனுமதி பெறப்பட்டுள்ளதே? அப்புறம் எப்படி மோசடியாகும்?' என்று கேள்வி எழுப்பினார்.

தடை இல்லை

அதற்கு அசன் முகமது ஜின்னா, 'கோவிலுக்கு நன்கொடை வழங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி மனுதாரர் நன்கொடை வழங்கலாம். ஆனால், கோவிலுக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று சமூக வலைதளம் மூலம் விளம்பரம் செய்து இதுபோல நிதி வசூலிக்கக் கூடாது. சரி அவ்வாறு வசூலித்த தொகையை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க கோரியபோது, அவர் ஒப்படைக்கவில்லை. இதன்மூலம் அவரது நோக்கம் என்ன என்று தெரிகிறது. இந்த வழக்கில் மேலும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியதுள்ளது. தடை விதித்தால், விசாரணை கடுமையாக பாதிக்கும்' என்றார்.

அதையடுத்து நீதிபதி, 'மனுதாரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை இல்லை. ஆனால் இந்த ஐகோர்ட்டின் அனுமதியின்றி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக்கூடாது. விசாரணையை வருகிற ஜூலை 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்' என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்