ஆம்பூரில் போலிபில் மூலம் சுங்க கட்டணம் வசூல்

போலிபில் மூலம் சுங்க கட்டணம் வசூல்செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

Update: 2022-08-18 18:17 GMT

ஆம்பூர் நகராட்சி கூட்டம், நகரமன்ற தலைவர் பி.ஏஜாஸ் அகமது தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் எம்.ஆர்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுநிதி செலவினங்கள், நிர்வாக மேம்பாடு உள்ளிட்ட தீர்மானங்களுக்கு அங்கீகாரம் கோரப்பட்டது. மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள், செய்யவேண்டிய பணிகள் குறித்து பேசினர்.

5-வது வார்டு கவுன்சிலர் வசுந்தராஜ் பேசுகையில் ஆம்பூர் ஏ. கஸ்பா பகுதி குப்பைக்காடாக திகழ்கிறது. குடிநீர் கலங்கலாக வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் ஏற்பட்டு வருகிறது. தூய்மையை பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே ஆம்பூர் பாலாற்றில் குப்பைகளை கொட்டுகிறது என்றார்.

13-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் பேசுகையில் ஆம்பூரில் பண்டிகை நேரத்தில் தனிநபர் ஒருவர் நகராட்சி ஆணையர் கையொப்பமிட்ட ரசீது வழங்கி சுங்க கட்டணம் வசூல் செய்துள்ளார். இதன் மூலம் நகராட்சிக்கு ரூ.10 லட்சம் வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர் உடனடியாக தலையிட்டு போலி பில் மூலம் வசூல் செய்த நபரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

12-வது வார்டு கவுன்சிலர் லட்சுமி பிரியா அன்பு பேசுகையில் எனது வார்டில் குப்பைகள் மலைபோல் கிடக்கிறது. குப்பைகளை அகற்ற வேண்டும் என்றார்.

10-வது வார்டு கவுன்சிலர் இம்தியாஸ் அகமது பேசுகையில் ஹவுசிங் போர்டு பகுதி அங்கன்வாடி மையத்தில் சுகாதார சீர்கேடு காரணமாக 2 மாணவருக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது. உடனடியாக நகராட்சி சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கவுன்சிலர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது உறுதி அளித்தார். நகராட்சி ஆணையாளர் ஷகிலா, பொறியாளர் ராஜேந்திரன், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்