தென்னை நார் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-25 19:45 GMT

பொள்ளாச்சி

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

வேலை நிறுத்தம்

சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மின் கட்டணத்தை குறைக்க கோரியும் தொழில் அமைப்பினர் வலியுறுத்தினர். ஆனால் மின் கட்டணம் குறைக்கப்படாததால் நேற்று தொழிற்சாலை உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் தொழிற்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இது தவிர தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.

'பீக் ஹவர்'

இதுகுறித்து கோவை மாவட்ட தென்னைநார் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுதாகர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 352 தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து தென்னை நார் பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்களை தயாரித்து வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

தற்போது பீக் ஹவர் நேரத்திற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது மொத்த மின் கட்டணத்தில் 15 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த மின் கட்டணம் தொழிற்சாலைகளை பீக் ஹவரில் இயக்கினாலும், இயக்காவிட்டாலும் செலுத்த வேண்டும்.

வர்த்தகம் பாதிப்பு

இதேபோன்று கிலோ வாட்டிற்கு ரூ.35 ஆக இருந்த கட்டணம் ரூ.150 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் தென்னைநார் தொழிற்சாலைகளை இயக்க முடியாது. ஆனால் அந்த நேரங்களிலும் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஏற்கனவே உலக பொருளாதார மந்தத்தால் தென்னைநார் தொழில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மின் கட்டணத்தால் தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மின் கட்டணத்தை குறைக்க கோரி வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். மேலும் ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்