ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கோவில்களில் உண்டியல் திறப்பு: ரூ.25 லட்சம், 79 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கை
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கோவில்களில் உண்டியல் திறக்கப்பட்டன. ரூ.25 லட்சம், 79 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.25 லட்சம் மற்றும் 79 கிராம் தங்கத்தை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
பெரியமாரியம்மன்
ஈரோடு மாநகரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறா கோவில்களாக சின்ன மாரியம்மன், நடுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் 3 மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையாளர் ரமணிகாந்தன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
காணிக்கை எண்ணும் பணியில் 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈடுபட்டனர். இதில் பெரியமாரியம்மன் வகையறா கோவில்கள் உண்டியல்களில் ரூ.7 லட்சத்து 26 ஆயிரத்து 921-ம், 38 கிராம் தங்கம் மற்றும் 295 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
முருகன்-ஈஸ்வரன் கோவில்
இதேபோல் ஈரோடு திண்டல் வேலாயுதசாமி (முருகன்) கோவிலில் 4 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கமாகும். அதன்படி நேற்று பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையாளர் சுவாமிநாதன் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. 9 உண்டியல்களில் மொத்தம் ரூ.11 லட்சத்து 31 ஆயிரத்து 737-ம், 35 கிராம் தங்கம் மற்றும் 640 கிராம் வெள்ளி காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.
ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்), கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்), மகிமாலீஸ்வரர் கோவில்களின் உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு எண்ணப்படும். அதன்படி நேற்று 3 கோவில்களில் வைக்கப்பட்டு உள்ள 19 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.6 லட்சத்து 40 ஆயிரத்து 306-ம், 6 கிராம் தங்கமும், 1,240 கிராம் வெள்ளியும் இருந்தது.
பெரியமாரியம்மன் கோவில், திண்டல் முருகன் கோவில், கோட்டை ஈஸ்வரன், பெருமாள், மகிமாலீஸ்வரர் கோவில்களில் மொத்தம் ரூ.24 லட்சத்து 98 ஆயிரத்து 964-ம், 79 கிராம் தங்கம், 2 கிலோ 175 கிராம் வெள்ளியும் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.