கோவையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

கோவையில் இறந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் இறந்த உறவினர் கல்லறைகளில் மெழுகு வர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.

Update: 2022-11-02 18:45 GMT

கோவை

கோவையில் இறந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் இறந்த உறவினர் கல்லறைகளில் மெழுகு வர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.

கல்லறை திருநாள்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களின் முன்னோர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, வண்ண மலர்களால் அலங்கரிப்பார்கள்.

பின்னர் அந்தந்த பகுதி ஆலய பங்குதந்தை மூலம் கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டதும், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

கிறிஸ்தவர்கள் உருக்கம்

அந்த வகையில் இந்த ஆண்டு கல்லறை திருநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கோவை சுங்கம், புலியகுளம், காந்திபுரம், திருச்சி ரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கு நேற்று திரளான கிறிஸ்தவர்கள் சென்றனர். அங்கு தங்களது முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து வண்ண மலர்கள் மற்றும் மாலைகளால் அலங்கரித்தனர். பின்னர் கல்லறைகளின் மீது மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

அப்போது இறந்தவர்களின் நினைவுகளை நினைத்து சிலர், மனம் உருகி கண்கலங்கினர். சிலர் தங்களின் குழந்தைகளுடன் வந்தும் பிரார்த்தனை செய்தனர். மேலும் இறந்தவர்களின் நினைவாக சிலர், ஏழை, எளிய மக்களுக்கு உணவு, உடை வழங்கினர். கல்லறை திருநாளையொட்டி கல்லறை தோட்டங்கள் உள்ள பகுதிகளில் தற்காலிக பூக்கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு தங்களுக்கு தேவையான பூக்களை கிறிஸ்தவர்கள் வாங்கி சென்றனர். மேலும் கல்லறை தினத்தையொட்டி அங்கு சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்