கோவை- சீரடி ரெயில் சேவை தனியாருக்கு அனுமதி: ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவை- சீரடி ரெயில் சேவை தனியாருக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:
கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு வழியாக சீரடிக்கு செல்லும் பாரத் கவுரவ் என்ற தனியார் சேவை ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை இயக்க தனியாருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.இ.யு. ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் நேற்று மாலை சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க கோட்ட செயலாளர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில தலைவர் எஸ்.கே. தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
கோவையில் இருந்து சீரடி செல்வதற்கு குறைந்தபட்ச ரெயில் கட்டணம் ரூ.1,280 முதல் அதிகபட்ச கட்டணம் ரூ.8 ஆயிரத்து 190 ஆகும், ஆனால் தனியார் மயமாக்கப்பட்ட இந்த ரெயிலில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 ஆயிரத்து 500 முதல் அதிகபட்ச கட்டணம் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது. தனியார் இயக்குவதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே இந்த ரெயிலை, ரெயில்வே நிர்வாகமே இயக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் நேதாஜி, அஞ்சலக ஓய்வூதிய சங்கத்தின் தலைவர் கே.ஆர். கணேஷ் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.