கோவை என்ஜினீயர் இங்கிலாந்தில் மர்மச்சாவு

இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்காக சென்ற கோவை என்ஜினீயர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2023-06-25 18:45 GMT

கோவை

இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்காக சென்ற கோவை என்ஜினீயர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த தகவல் விவரம் வருமாறு:-

இங்கிலாந்தில் மேற்படிப்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தனது குடும்பத்துடன் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகன் ஜீவந்த் (வயது 25). என்ஜினீயரிங் படித்த இவர் எம்.எஸ்.சி. இன்டர்நேஷனல் பிசினஸ் படிக்க இங்கிலாந்தில் பர்மிங்காம் பகுதியில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தார்.

அவருக்கு இடம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லூரியில் சேர்ந்தார். தொடர்ந்து பல்கலைக்கழக விடுதியில் தங்கிருந்து மேற்படிப்பு படித்து வந்தார்.

நூலகத்துக்கு சென்றார்

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மாலை 6.30 மணிக்கு பல்கலைக்கழகம் அருகே உள்ள நூலகத்துக்கு ஜீவந்த் சென்றார். அவரை இரவு 9 மணியளவில் நண்பர்கள் சாப்பிட வருகிறாயா என்று செல்போனில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பிறகு வருகிறேன் என்று கூறியதாக தெரிகிறது.

ஆனால் இரவு 11 மணியை தாண்டியும் ஜீவந்த் விடுதி அறைக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து விடுதி நிர்வாகத்திடம் கூறினார்கள். இதையடுத்து விடுதி நிர்வாகிகள் இங்கிலாந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மாயமான ஜீவந்த்தை தேடினார்கள்.

கோவை மாணவர் உயிரிழப்பு

இந்த நிலையில் பர்மிங்காம் கால்வாயில் மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை வெஸ்ட் மிட்லண்ட் போலீசார் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தியபோது அவர் காணாமல்போன ஜீவந்த் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகிகள் கோவையில் உள்ள ஜீவந்த் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

பெற்றோர் அதிர்ச்சி

மகன் இறந்த தகவலை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த தகவலை அறிந்ததும் ஜீவந்த்தின் உறவினர்கள், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் குவிந்தனர். இதன் காரணமாக அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

நூலகத்துக்கு படிக்க சென்ற மாணவர், பர்மிங்காம் கால்வாயில் அடித்துச்செல்லப்பட்டது எப்படி? என்ற சந்தேகம் வலுத்துள்ளதால் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றாக படிக்கக்கூடியவர்

இதுகுறித்து உயிரிழந்த ஜீவந்த்தின் தம்பி ரோகன் கூறியதாவது:-

எனது அண்ணன் நன்றாக படிக்கக்கூடியவர். அவர் தினமும் என்னிடமும், பெற்றோரிடமும் போனில் பேசுவார். சம்பவம் நடந்த முந்தைய நாள் கூட எங்களிடம் பேசினார். நூலகத்தில் படித்துக்கொண்டு இருந்தவர் பர்மிங்காம் கால்வாயில் மீட்கப்பட்டதுதான் எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. இதுகுறித்து தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ஜீவந்த்தின் உடலை இங்கிலாந்தில் இருந்து கோவைக்கு கொண்டு வர இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்