கோவையில் கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி:நாகை அருகே 2 பேர் வீடுகளில் போலீசார் சோதனை
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நாகை அருகே 2 பேர் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நாகை அருகே 2 பேர் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
தேசிய புலனாய்வு முகமை
நாகை அருகே சிக்கல் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் அசன்அலி (வயது 33). இவருக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவருடைய வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது வீட்டில் இருந்து மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை பிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அசன்அலி கைது செய்யப்பட்டார்.
போலீசார் சோதனை
பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே சந்தேகத்துக்கு உரிய நபர்கள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகளில் தமிழக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.அதன்படி நாகை அருகே சிக்கல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அசன் அலி, வீட்டில் நேற்று காலை நாகை வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) பாக்கியராணி ஆகியோர் முன்னிலையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
மற்றொருவர் வீட்டிலும் சோதனை
இதேபோல, நாகை அருகே உள்ள மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது என்பவரது வீட்டிலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.இந்த சோதனை ஒரு மணி நேரம் நடந்தது. அப்போது 2 வீடுகளிலும் எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.