விலை வீழ்ச்சியால் தேங்கி கிடக்கும் தேங்காய்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் விலைவீழ்ச்சியால் தோப்புகளிலும், குடோன்களிலும் குவியல், குவியலாக தேங்காய்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் ேவதனை அடைந்துள்ளனர்.

Update: 2023-07-10 16:58 GMT

தென்னை சார்ந்த தொழில்கள்

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. குறிப்பாக பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, அய்யம்பாளையம், மருதாநதி அணை பகுதி, கோம்பை, சித்தரேவு, சித்தையன்கோட்டை, ஆத்தூர், எம்.வாடிப்பட்டி, சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பட்டிவீரன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்களின் வாழ்வாதாரமாக தென்னை விவசாயம் உள்ளது. மேலும் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் பல்வேறு மூலப்பொருட்களை அடிப்படையாக கொண்டு தென்னை சார் தொழில்களும் நடைபெற்று வருகின்றன.

தென்னை மட்டையில் இருந்து கயிறு மற்றும் நார் தயாரித்தல், தென்னம்பாலை செய்தல், கிடுகு பின்னுதல், துடைப்பம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. இதேபோல் தென்னை மரம் ஏறுதல், தென்னந்தோப்பு பராமரிப்பு பணி, தேங்காய் உரித்தல் உள்பட நேரடி மற்றும் மறைமுகமாக வேலைகளிலும் பலர் ஈடுபட்டுள்ளனர்.

தேங்காய் குடோன்கள்

இதேபோல் விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை கொள்முதல் செய்யும் வகையில் அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி, சித்தையன்கோட்டை உள்ளிட்ட இடங்களில் குடோன்கள் உள்ளன. இங்கு குவியல், குவியலாக தேங்காய்கள் குவிந்து கிடக்கின்றன.

மட்டைகளில் இருந்து உரித்து தேங்காய்களை வெளிமாநிலங்களுக்கு வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர். மேலும் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதுமட்டுமின்றி தேங்காய்களை ஓட்டில் இருந்து பிரித்து எடுத்து, அதன் பருப்புகளை உலர்களங்களில் காய வைத்து, தேங்காய் எண்ணெய் தயாரிப்பதற்காக கொப்பரை தேங்காய்களாக மாற்றியும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு தேங்காய் ரூ.15 வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது தேங்காய் விலை இறங்கு முகமாக உள்ளது. நாளுக்குநாள் விலை நலிவடைந்து கொண்டே இருக்கிறது. ஒரு தேங்காய் ரூ.7-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தென்னை விவசாயத்தை கைவிடும் நிலை

இதேபோல் வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு வளர்த்து வருகின்றனர்.

தேங்காய்கள் காய்த்த பிறகு கூலி ஆட்களை வைத்து பறித்து, உரித்து, வாகனங்களில் ஏற்றி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த பகுதி விவசாயிகளிடம் இருந்து ஒரு தேங்காய் ரூ.5 முதல் ரூ.7 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

தாங்கள் செலவழித்த தொகை கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. போதிய விலை கிடைக்காததால், வடமதுரை பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில், விற்பனை ஆகாத தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக ஏராளமான விவசாயிகள், தென்னை சாகுபடியை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விலை நிர்ணயம் அவசியம்

தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் சதம் அடித்து கொண்டிருக்கும் வேளையில் தேங்காய் விலை தேய்ந்து கொண்டே இருப்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர். அதேநேரத்தில், தென்னந்தோப்பில் மேற்கொள்ளும் பராமரிப்பு செலவு ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொப்பரை தேங்காய் விலையும் சரிந்து விட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் கொப்பரை உலர்களம் மற்றும் தேங்காய் எண்ணெய் மில்கள் அதிகளவில் உள்ளது. இதனால் காங்கயம் மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில் தான், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

குறிப்பாக ஒரே வாரத்தில் 4 முறை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் கூடுதல் விலைக்கு விவசாயிகளிடம் தேங்காய் வாங்கினால் திடீரென மார்க்கெட் விலை குறைந்து விடுகிறது என்பது வியாபாரிகளின் வேதனையாக உள்ளது.

ரேஷன்கடைகளில் தேங்காய் எண்ணெய்

இதேநிலை நீடித்தால் தென்னை சாகுபடி படிப்படியாக குறைந்து விடும் என்பதில் அய்யமில்லை. எனவே தேங்காய்களுக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு விலை மாறாமல் இருக்க வேண்டும். அப்போது தான் வியாபாரிகளும், விவசாயிகளும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகளும், விவசாயிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுகுறித்து வடமதுரை அருகே உள்ள கொம்பேறிபட்டியை சேர்ந்த விவசாயி ராமர் கூறுகையில், தேங்காய்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விற்பனை செய்யாமல் தோட்டங்களிலேயே குவித்து வைத்துள்ளோம். ரேஷன்கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அப்போது தான் தேங்காய்களின் தேவை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றார்.

முளைக்கும் தேங்காய்கள்

தேங்காய்களில் இருந்து உரிக்கப்பட்ட மட்டைக்கு கடும் போட்டி நிலவும். ஏனெனில் இந்த மட்டை தான், தென்னை சார்ந்த பல்வேறு தொழில்களுக்கு அடித்தளமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மட்டை 60 பைசாவுக்கு விற்பனை ஆனது. ஆனால் நாளடைவில் மட்டையின் விலையும் சரிந்து விட்டது. தற்போது தேங்காய் மட்டையை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இலவசமாக எடுத்து செல்லுங்கள் என்று வியாபாரிகள் கூறியபோதிலும், அதனை எடுத்து செல்ல ஆட்கள் இல்லை. இதற்கிடையே விலை வீழ்ச்சியால் விற்பனை ஆகாமல் குடோன்களில் தேங்கி கிடக்கும் தேங்காய்கள் முளைக்க தொடங்கி விட்டன. இதேபோல் பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள பல்வேறு தென்னந் தோப்புகளிலும் தேங்காய்களை வாங்க ஆள் இல்லாமல் குவிந்து கிடக்கின்றன. விலை உயரும் என்ற நம்பிக்கையில் சில விவசாயிகள் தேங்காய்களை இருப்பு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

------

Tags:    

மேலும் செய்திகள்