தென்னை வணிக வளாகம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?
பட்டுக்கோட்டையில் தென்னை வணிக வளாகம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தஞ்சாவூர்;
பட்டுக்கோட்டையில் தென்னை வணிக வளாகம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தென்னை சாகுபடி
தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக டெல்டா விவசாயிகளின் இரண்டாவது மிகப்பெரிய வாழ்வாதாரமாக விளங்கி வரும் தென்னை சுமார் 60 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியில் விளையும் தேங்காய்கள் அதன் அளவு, சுவை, மனம் போன்றவைகள் மூலம் உலகஅளவில் சிறப்பு பெற்றுள்ளது.தஞ்சை மாவட்ட தென்னை விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமான தேங்காய் வருமானம் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலால் முடங்கி போனது. லட்சக்கணக்கான தென்னை மரங்களை இழந்து தேங்காய் மூலம் வருவாயின்றி விவசாயிகள் தடுமாறி வந்தனர். தற்போது தான் கொஞ்சம், கொஞ்சமாக விளைச்சல் அதிகரிக்க தொடங்கி பொருளாதார இழப்பில் இருந்து மீண்டு வருகின்றனர்.
தேங்காய் விலை
ஆனால் தற்போது தேங்காய் விலை வீழ்ச்சியின் காரணமாக தென்னை விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ரூ.30-க்கு தேங்காய் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது விற்பனையின்றி விலை சரிந்து ஒரு தேங்காய் ரூ.8 முதல் ரூ.9 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெட்டிய தேங்காய்களை விற்பனை செய்ய முடியாமல் தோப்புகளிலும், தேங்காய் வெட்டாமல் மரங்களிலும் தேங்கி கிடக்கிறது.இதனால் தென்னை விவசாயிகள் மட்டுமின்றி தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், தேங்காய் வெட்டும் தொழிலாளர்கள், கொப்பரை காய வைப்போர் உள்ளிட்ட பலரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகளால் வெட்டப்படும் தேங்காய் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு ஓரளவுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். தேங்காயை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் நீண்டநாட்களாக கோரிக்கை வைத்தனர்.
ரூ.8 கோடியில் தென்னை வணிக வளாகம்
இந்த கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, பட்டுக்கோட்டை பகுதியில் தென்னை வணிக வளாகம் கட்டப்படும் என அறிவித்தார். இதையடுத்து பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டை உக்கடை கிராமத்தில் 22 ஏக்கரில் சேமிப்பு கிடங்கு, கொப்பரை தரம் பிரிக்கும் பகுதி, எண்ணெய் பிழியும் ஆலை, சூரிய ஒளி களம், ஏல அரங்கம், 18 வகையான தேங்காயை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தயாரிக்கும் தொழிற்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.8 கோடி செலவில் தென்னை வணிக வளாகம் கட்டப்பட்டது.
இந்த வணிக வளாகத்தை கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி காணொலிக்காட்சி வாயிலாக திறந்துவைத்தார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே தென்னை வணிக வளாகம் செயல்பாட்டுக்கு வராமல் முடங்கியது. இந்த தென்னை வணிக வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மு.க.ஸ்டாலின் ஆய்வு
இதை ஏற்று 2015-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தென்னை வணிக வளாகத்தை பார்வையிட்டு, அதை செயல்பாட்டுக்கு கொண்டு வராத அப்போதைய ஆளும்கட்சியான அ.தி.மு.க. அரசு மீது குற்றம்சாட்டினார். ஆனால் அதன்பிறகும் செயல்பாட்டுக்கு வரவில்லை.இதற்கிடையில் 2021-ம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், சில மாதங்கள் கழித்து மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வணிக வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் அதன்பிறகும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.6 கோடி மதிப்பில் எந்திரம் நிறுவப்பட்டது. இந்த எந்திரத்தில் முழு தேங்காயை போட்டால் போதும், அந்த தேங்காய் உரிக்கப்பட்டு, தேங்காய் பால் எடுக்கப்பட்டு, அந்த பால் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு வெளியே வந்துவிடும்.தேங்காய் துருவல் மூலம் சாக்லெட் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கலாம். இப்படி பல்வேறு வசதிகள் இந்த எந்திரத்தில் உள்ளது. ஆனால் அதன்பிறகு சோதனை ஓட்டம் கூட நடத்தப்படாமல் அப்படியே இருக்கிறது. தென்னை விவசாயிகளின் நலன் கருதி தென்னை வணிக வளாகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தென்னை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வேதனை
இது குறித்து நசுவினி ஆறு படுக்கை அணை, விவசாயிகள் மேம்பாட்டு சங்க தலைவர் வீரசேனன் கூறியதாவது:-பட்டுக்கோட்டை பகுதியில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆனால் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. தேங்காயை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதன்மூலம் வருவாய் பெற வேண்டும் என்பதற்காக தென்னை வணிக வளாகம் கட்டப்பட்டது. தேங்காயை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் தென்னை விவசாயத்தில் லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் கட்டப்பட்டு, திறக்கப்பட்டு தென்னை வணிக வளாகம் 11ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.கஜா புயலில் சுமார் 4 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டன. இருந்தாலும் தற்போது தேங்காய் உற்பத்தி அதிகமாகவே இருக்கிறது. ஆனால் தேங்காயை பயன்படுத்தினால் பாதிப்பு வரும் என தவறான தகவல் காரணமாக தேங்காய் பயன்பாடு குறைந்துவிட்டது. தேங்காய் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொங்கு மண்டலத்தில் இளநீருக்காக தேங்காயை பறித்து பெங்களூரு உள்ளிட்ட நகரப்பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
கடைக்கண் பார்வை
கால்நடைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புண்ணாக்கில் இருந்து கூட எண்ணெய் எடுக்கின்றனர். எனவே தேங்காயை அரசே கொள்முதல் செய்து மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இதற்காக தென்னை வணிக வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடைக்கண் பார்வை பட்டால் மட்டுமே தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.