ஆடிமாத பிறப்பையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை நடந்தது. சிறுவர்- சிறுமிகள் உற்சாகமாக தேங்காய் சுட்டு மகிழ்ந்தனர்.
தேங்காய் சுடும் பண்டிகை
ஆடி மாத பிறப்பையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை நடந்து வருகிறது. அதன்படி, ஆடி மாதம் பிறப்பையொட்டி நேற்று மாலை வழக்கம்போல் வீடுகளில் தேங்காய் சுடும் பண்டிகையை கொண்டாடினர்.அதாவது, வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகள், பெண்கள், புதுமண தம்பதியினர் தேங்காயை சுட்டு மகிழ்ந்தனர். இதையொட்டி இளம் தேங்காயில் தண்ணீரை வெளியேற்றிவிட்டு அவல், பொட்டு கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்களை நிரப்பி தேங்காயின் ஒரு கண்ணில் அழிஞ்சி குச்சியை சொருகி தீயில் வாட்டி சுட்டனர்.
உற்சாகம்
இவ்வாறு சுடப்பட்ட தேங்காய்களை அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் படைத்து வழிபட்டனர். பின்னர் அந்த தேங்காயுடன் தீயில் சுட்ட பொருட்களை அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்தும், குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டும் தலை ஆடி பண்டிகையை கொண்டாடினர்.
சேலம் மாநகரில் குகை, அன்னதானப்பட்டி, பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள அண்ணா நகர், அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட வீதிகளில் தலை ஆடியையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை ஆங்காங்கே தெருக்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.