குருத்தழுகல் நோய் தாக்குதலால் வெட்டப்படும் தென்னை மரங்கள்

Update: 2023-08-10 16:13 GMT


மடத்துக்குளம் பகுதியில் குருத்தழுகல் நோய் தாக்குதலால், காய்க்கும் நிலையிலுள்ள தென்னை மரங்களை வெட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைத்துள்ளனர்.

நோய் தாக்குதல்

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. சமீப காலங்களாக தேங்காய், கொப்பரை, தேங்காய் உரிமட்டை உள்ளிட்ட தென்னை சார்ந்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இந்த நிலையில் மடத்துக்குளத்தையடுத்த பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் நோய் தாக்குதலால் காய்ந்து வீணாகி வருகின்றன. இதுகுறித்து பாப்பான்குளத்தைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் என்பவர் கூறியதாவது:-

எங்கள் தோப்பில் சுமார் 25 வயதுடைய நாட்டு ரக தென்னை மரங்கள் 400 உள்ளது. மரங்களுக்கு போதுமான அளவில் தண்ணீர் பாய்ச்சி வரும் நிலையிலும் தென்னை ஓலைகள் கருகி வருகிறது. அத்துடன் குருத்துப் பகுதி அழுகி காய்ந்து விடுகிறது. இது என்ன விதமான நோய் என்று தெரியாத நிலையில் இதுவரை 10 தென்னை மரங்களை நோய் பாதிப்பால் வெட்டியுள்ளோம். தொடர்ந்து தென்னை மரங்கள் பாதிப்படைவதைத் தவிர்க்க வேளாண்மைத்துறையினர் வழிகாட்ட வேண்டும். மேலும் இழப்பீடு வழங்கவும் வழி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

விஞ்ஞானிகள் பரிந்துரை

இதனையடுத்து மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி, கிராம நிர்வாக அலுவலர் முஜிபுர் ரகுமான், உதவி தோட்டக்கலை அலுவலர் சுந்தரம் ஆகியோர் நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

குருத்தழுகல் நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்னை மரங்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத நிலையில் இந்த நோயால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே நோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தென்னை மரங்களை இழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். நோய் அறிகுறி, பாதிப்பு மற்றும் பரவாமல் தடுப்பது குறித்து வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடம் பரிந்துரை பெற்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

காய்த்து வந்த தென்னை மரங்களை வெட்டி அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளதால், நோய் பரவாமல் தடுக்க வேளாண்மைத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்