ஒளி வெள்ளத்தில் கல்திட்டைகள்
கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் ஒளி வெள்ளத்தில் கல்திட்டைகள் மிதக்கின்றன.
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல்வேறு இடங்களில் உள்ளன. குறிப்பாக வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான கல்திட்டைகள் அதிக அளவில் உள்ளன. அந்த கல்திட்டைகளை பகலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.
ஆனால் கல்திட்டைகளை இரவிலும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் மின்விளக்குகள் பொருத்த அப்பகுதி மக்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி தனியார் பங்களிப்புடன் அங்கு பல வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டன. நேற்று முதல் மின் விளக்குகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து ஒளிவெள்ளத்தில் கல்திட்டைகள் மிதக்கின்றன.
விழிகளை விரிய வைக்கும் எழில் கொஞ்சும் அந்த காட்சியை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். வருங்காலத்தில் அங்கு இரவு நேரத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.